விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சேர்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதில் மூன்று மாதம் கழித்து அனைவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இன்று காலை சக்திவேல், தர்மராஜ் அண்ணன் - தம்பி இருவரும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது நான்கு பேர் கொண்ட கும்பல் மண்வெட்டி, அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் விழுந்தனர்.
![முன்விரோதம் காரணமாக சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7665793_vnr.jpg)
இது குறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை முதலுதவிக்காக தங்கள் வாகனத்தில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படுகாயமடைந்த இருவரையும் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தர்மராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பழிக்கு பழி வாங்கும் நேக்கில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: ரயில் பாதையில் கிடந்த சடலங்கள்: காவலர்கள் விசாரணை!