விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த சக்திவேல், தர்மராஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூன்று மாதம் கழித்து இவர்கள் அனைவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். தங்கவேல் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல், சகோதரர்களான சக்திவேல், தர்மராஜ் ஆகிய இருவரும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது மண்வெட்டி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தளவாய்புரம் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் இக்கொலை முயற்சி தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ், பாலமுருகன், பாலசுப்ரமணி ஆகிய மூன்று சகோதரர்களை கைதுசெய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தங்கவேல் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.