உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்துவருகிறது. டெல்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் முதல் வாரம் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவியுள்ளதாக சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் 1500 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மாநாட்டில் கலந்துகொண்டதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 13 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. அதை தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேநீர் கடைகளை மூடி பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்