மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாவட்ட எல்லைகளை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சோதனை சாவடிகளில் கூடுதலாக சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விருதுநகா் மாவட்டத்தில், ஏற்கனவே 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சாத்தூா் அருகே கலிங்கபட்டி கிராமத்தில் உள்ள 13 வயது சிறுவனுக்கும், அருப்புக்கோட்டை அருகில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் உள்ள 29 வயது பெண்ணுக்கும், இன்று (மே.8) கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது.
இவா்கள் இருவரும் சென்னையில் இருந்து வந்தவா்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதி முழுவதும் மாவட்ட நிர்வாகத்தால் பலத்த பாதுகாப்புடன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து விருதுநகா் மாவட்ட எல்லையிலுள்ள 6 சோதனை சாவடிகளிலும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபா்களை தீவிர சோதனைக்குப் பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும் நபா்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்க மறுத்து, அரசு அலுவலர்கள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.