உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வின்றி பல இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாய் சுற்றிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காய்கறி வாங்குவதற்கும் இறைச்சி வாங்குவதற்காகவும் கூறி இருசக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பமாய் சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் கூட அணியாமல் சுற்றிவருகின்றனர்.
கரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் எமதர்மன் வேடமணிந்த நபர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை நகருக்குள் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் தங்கள் குழந்தைகளோடு சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அவர்களை தன் கையில் வைத்திருந்த பாசக்கயிறை பிடிக்கச் சொல்லி இனி முகக்கவசம் அணியாமல் வெளியே வரமாட்டேன், சமூக இடைவெளியை பின்பற்றுவேன், தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்ற மாட்டேன் என கரோனா உறுதிமொழி ஏற்கச் சொல்லி நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.
அதேபோல் அருப்புக்கோட்டை காய்கறி விற்பனையகத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களையும் முகக்கவசம் அணியாதவர்களையும் பிடித்து காவல் துறையினர் உறுதிமொழி ஏற்க செய்தனர். காவல் துறையின் இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.