விருதுநகர்: ராஜபாளையம் கோதைநாச்சியார்புரத்தில், காேயில், நடைபாதையைப் பயன்படுத்துவதில் இரண்டு பிரிவினருக்கு இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூலை 4) இரவு, அந்த பாதை வழியாக, மூன்று பேர் மதுபோதையில் இருசக்கர வானத்தில் சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாய்தகராறு கைகலப்பாக மாறியது. அதில், பெண் ஒருவருக்கு அரிவாளால் வெட்டுப் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினரும் மது போதையிலிருந்ததால், இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து வெட்டுக்காயமடைந்த பெண் பிரியங்காவுக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் மோதல்
இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை மீண்டும் இரு பிரிவிவரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராஜகுரு என்ற இளைஞர் தாக்கப்பட்டார். அதில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் ராஜபாளையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தகவல் அறிந்து, துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மாரி ராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின் நடைபாதை, கோயில் பிரச்னையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
காவலர்கள் குவிப்பு
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இரண்டு பிரிவினர் மீதும் ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய பலரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரிலிருந்து வெளியே செல்வதற்கும், ஊருக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?