சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் நேற்று முன் தினம் இரவு பாக்மதி எக்ஸ்பிரஸ்(12578) ரயில் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், விபத்து குறித்து விசாரிக்க 6 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் ஆய்வு தொடங்கி, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பது, ஏதாவது சதி வேலை நடக்கிறதா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மோப்ப நாய்களுடன் உதவியுடன் நேற்று வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதில், பலத்த சத்தத்துடன் விபத்து நேர்ந்ததாகவும், கிரண் குமார் என்ற ரயில்வே ஊழியர் முதலில் சென்று விபத்து பகுதியை பார்த்து தகவல் அளித்ததாகவும் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீட்புப்பணிகள் முடிந்து கவரைப்பேட்டை வழியாக மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!
தொடர்ந்து, ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார், பாரதீய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 281 (வேகமாகவும், கவனக்குறைவாக செயல்படுதல்) பிரிவு 125 a (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் காயம் ஏற்படும் விதத்திலும் செயல்படுதல்), பிரிவு 125 b (கடுமையான காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்), ரயில்வே சட்டம் 1989 - 154 பிரிவு ( ரயில் பயணிகளுக்கு ஆபத்தான வகையில் வேகமாக செயல்படுதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் ஏற்பட்ட விபத்தில் இருபக்கமும் போக்குவரத்து மதியம் தொடங்கிய நிலையில், 10 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன. இன்று இரவுக்குள் லுப் லைன்ஸ் சரி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.