மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, இடையன்குளம் வனபகுதியில் மலை மேல் அமைந்துள்ள பேமலையம்மன் ராக்காட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடத்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து, வனப்பகுதியில் உள்ள கோயிலில் புரட்டாசி மாத திருவிழாவை கொண்டாட அனுமதி அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா இடையன்குளம் வனபகுதியில் மலை மேல் அமைந்துள்ள அருள்மிகு பேமலையம்மன் (எ) ராக்காட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்லும் பகுதி வன ப்பகுதியாக அமைந்துள்ளது.
நரை, அணில் சரணாலயம் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து சேர்ந்து திருவிழா நடத்துவது வழக்கம். 2022ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவிழா நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட வன அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, பேமலையம்மன் (எ) ராக்காட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடத்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘2019ஆம் பல்வேறு நிபந்தனைகளுடன் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஆண்டுதோறும் பயன்படுத்தக் கூடாது.
2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் இனி வரும் காலங்களில் புரட்டாசி மாதம் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்ற மனுவும் நிலுவையில் உள்ளது. ஆகவே முந்தைய உத்தரவில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றினால் வனப் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். வனப்பகுதியில் செல்லும் பக்தர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது. வனவிலங்கு அதிகாரியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மனுதாரர் மற்றும் பிற பக்தர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
நாரை, அணில் சரணாலயம் அமைந்துள்ள இடம் என்பதால் வனவிலங்குகளுக்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்து புரட்டாசி மாத திருவிழாவை கொண்டாட வனப் பகுதிக்குள் செல்ல வனவிலங்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்..
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களில் 2,42,122 தீர்மானங்கள் நிறைவேற்றம்