விருதுநகர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்தில், முன்னதாக தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 57 இடங்களில் கடந்த 12ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. அத்தியாவசியக் கடைகள் தவிர, மற்ற வணிகக் கடைகள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மேலும் 107 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இன்று முதல் மறுஅறிவிப்பு வரை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் 13 பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 பகுதிகள், வத்ராப்பில் 5 பகுதிகள், சிவகாசியில் 11 பகுதிகள், வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகரில் தலா 24 பகுதிகள், அருப்புக்கோட்டையில் 18 பகுதிகள், திருச்சுழியில் 12 பகுதிகள், காரியாபட்டியில் ஒரு பகுதி என 107 பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை மூன்றாயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டாயிரத்து 71 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆயிரத்து 295 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.