விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு மற்றும் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் மட்டும் நோய்த்தொற்றை குறைத்துவிட முடியாது . மாவட்ட மருத்துவமனைகளில் பரிசோதனை கருவிகளை அதிகப்படுத்தி கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கவேண்டும். வெளி மாவட்டங்களிலிருந்தும் ,வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு முறையான பரிசோதனை செய்து அவர்களுடைய இடங்களுக்கு அனுப்ப வேண்டும் . மாவட்டம் முழுவதும் ஊராட்சி மன்றங்கள், நகராட்சி மன்றங்கள் மூலம் நாள்தோறும் கபசுரக் குடிநீர் மக்களுக்கும வழங்க வேண்டும்.
அதேபோல் மருத்துவர்களுக்கு வழங்குவது போல காவலர்களுக்கும் கரோனா முடியும் வரை பாதுகாப்பு உடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது.