கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இருந்தும் சில பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாததால், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 1000க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் குவிந்து தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாளை வட்டாட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஏழு வியாபாரிகள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வாகன ஏற்பாடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: உ.பி. தொழிலாளர்கள் 1,425 பேர் ரயிலில் அனுப்பிவைப்பு