விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த பழனி(50), புலிக்குறிச்சியை சேர்ந்த பாக்கியம்(35) ஆகிய இருவரும் சமையல் வேலை செய்வதற்கு கேத்தநாயக்கன்பட்டி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பள்ளிமடம் மருத்துவர் காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியிலிருந்து அரசு பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் போது முன் நின்று கொண்டிருந்த மினிபேருந்தை ஓவர்டேக் செய்யும்போது அருப்புக்கோட்டையில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதியது. இதில் ஓட்டுநர் நடத்துநர் உட்பட பயணிகள் 15 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் விரைந்து வந்து காயம்பட்ட பயணிகளை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கணேசன், அவரது மனைவி வடிவழகி இவர்களுக்கு சதீஷ், விபிஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் பள்ளி முடித்து விட்டு திறந்த வெளியில் மலம் கழிக்க சென்ற நிலையில் விபிஷ் என்ற ஏழு வயது சிறுவன் சதீஷ் கண் முன்னே மாத்தூர் மேடாங்குௗம் கண்மாயில் தவறி விழுந்துள்ளான்.
பின்னர், சதீஸ் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் உறவினர்கள் நீரில் மூழ்கிய விபிஷை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண்முன்னே தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை