விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், “இட ஒதுக்கீடு என்பது ஒரு சமூக நீதி பிரச்னையாகும். மாநிலங்கள் மத்திய அரசுக்கு வழங்கிய இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர்ந்த வழக்கில், சமூக நீதியை வெறுக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. பல்வேறு காரணங்களை கூறி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது
அதேபோன்று அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு ஏழு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இனியும் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் கையெழுத்திட வேண்டும். மத்திய அரசு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அலுவலர்கள் துணை போகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மதுரையில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இன்னும் பணிகள் தொடங்காத நிலையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட பகுதியை சேர்ந்த எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த குழுவில் இடம் பெறவில்லை
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. ஆனால், தற்போது வெங்காய விலை அதிகரித்த நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.