நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கக்கோரி, 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் பட்டாசு தயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது.
குறிப்பாக பேரியம் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதோடு, காற்று, ஒலி மாசைக் குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில் இவ்வழக்கு தொடர்பாக மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி பட்டாசு தயாரித்து வருவதாக புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து ஆறு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் சாத்தூர், சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ இன்று காலை தொடங்கி திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலைப் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஆய்வுசெய்த சிபிஐ குழுவினர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களையும், அதன் கலவைகளையும், செய்து முடிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து எடுத்துச் சென்றனர்.
மத்திய ஆய்வகங்களுக்கு இவை கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதனை செய்தபின்னர், அதனறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.