அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சரத்குமார் (28), இவரது மனைவி ஜெயபாரதி (24). இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்ததிலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயபாரதி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்துவந்த நகர் காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், பெண்ணின் தற்கொலைக்கு அவரது கணவன் குடும்பத்தாரே காரணம் எனப் புகார் தெரிவித்தும், அவரது குடும்பத்தாரை கைதுசெய்ய வலியுறுத்தியும், பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யவிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து விரைந்துவந்த அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர், சகாயஜோஸ் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு சமாதானமானார்கள்.