விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவல் துறையினர் முக்கியமான பகுதிகளில் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்துச் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ் (49) நேற்று முன்தினம் (ஜனவரி 2) வடக்கு ரத வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் வெங்கடேஷை (29) சோதனைசெய்தனர். அவரிடம் ஆவணங்கள் சரியாக இல்லாததால் தர்மராஜ் 600 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தர்மராஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அபராத தொகையைச் செலுத்துவதாகக் கூறி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜை கொலைசெய்ய முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தர்மராஜ் அவரைத் தடுத்துள்ளார்.
இருப்பினும் அவரது சட்டையைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இளைஞர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
பின் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சம்பவத்தின்போது இளைஞர், சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ் இருவரும் மோதிக்கொண்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் - அமைச்சர் மூர்த்தி