முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்றம் 15 நாள் பரோல் விடுமுறை வழங்கியது.
அதன்படி, கடந்த 10ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த ரவிச்சந்திரன் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது தாயாருடன் வசித்துவந்தார். விடுமுறையில் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்த ரவிச்சந்திரன் முதியோர் இல்லத்துக்குச் சென்று அன்னதானமும் வழங்கினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் ரவிச்சந்திரனை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் இன்றுடன் விடுமுறை முடிந்ததால் ரவிச்சந்திரனை துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் அவரது இல்லத்திலிருந்து மதுரை மத்திய சிறைக்கு வேனில் அழைத்துச் சென்றனர். ரவிச்சந்திரனை அழைத்துச் சென்ற வாகனத்தின் முன்னும் பின்னும் காவலர்களின் வாகனங்கள் பாதுகாப்பிற்காகச் சென்றன.
இதையும் படியுங்க: ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்