விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் சாத்தூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் உள்பட பல அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "பொதுமக்களிடம் தனித்து இரு, விழித்திரு என்பதன் முக்கியத்துவத்தையும், தனிமைப்படுத்துவதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்தும் அலுவலர்கள் விளக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மூலம் நகர்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, 1000 ரூபாய் பணத்தை சமூக ஆர்வலர்களை பயன்படுத்தி வீடுதோறும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது விடுமுறையில் உள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் கரோனா வைரஸுக்கு பயந்து மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் விடுமுறையில் சென்றுள்ளனர். அடிப்படைத் தேவையான தீப்பெட்டி தொழிற்சாலைகளின் 50 விழுக்காடு பணியாளர்கள் வைத்து கரோனா தடுப்பு நடவடிக்கை பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - கே.எஸ். அழகிரி