விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் (மார்ச்1) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், மனு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாவாலி கிராமத்தின் சந்திரகிரி விளக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் சிவஜோதி, மதுக்கடை திறக்கும் நடவடிக்கை கைவிடப்படும் என்று உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆனால், சிலர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கடையை திறக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஏடிஎஸ்பி மரியராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் ஏடிஎஸ்பி மரியராஜ் மதுக்கடைக்கு பூட்ட உத்தரவிட்டார். மதுக்கடையை மூடிய பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : ’வெற்றி பெறவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறுகிறோம்’ - கே.என்.நேரு