விருதுநகர்: நகராட்சியில் 15ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாஃபா பாண்டியராஜன் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் பரப்புரை மேற்கொண்டார்.
சமூகநீதி கூட்டமைப்பில் அதிமுக சேராது என்ற தங்கம் தென்னரசு அறிக்கைக்குப் பதில்
அதன்பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய மாஃபா பாண்டியராஜன், ”சமூக நீதியின் முதல் குரல் விருதுநகர் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் எழுந்தது. சமூகநீதி காத்த வீராங்கனை என்று யாருக்குப் பட்டம் கொடுத்தார்கள் எனத் தங்கம் தென்னரசுவிற்குத் தெரியும்.
சமூகநீதி 69 விழுக்காடு என நிலைநாட்டியது ஜெயலலிதாதான் என்பது தங்கம் தென்னரசுவிற்குத் தெரியும். சமூகநீதி என்றாலே அது அதிமுக ஆட்சிதான் என அரசியல் அரிச்சுவடி படித்தவர்களுக்குத் தெரியும்.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சமூக நீதிக்காகப் பெரும்பங்காற்றியுள்ளார்கள். சமூகநீதி கட்டமைப்புக்கான முதல் அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் சமூகநீதிக்கு எதிரான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக உட்காருமா அது சாத்தியமா அதைத்தான் ஓபிஎஸ் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதே சமூகநீதி கூட்டமைப்பில் அதிமுக சேராததற்கு காரணம் என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. திமுக பாஜக உடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது பாஜகவின் சமூகநீதி பற்றி திமுகவிற்குத் தெரியவில்லையா? தேர்தலுக்காகக் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்களுடைய கொள்கைகளை எங்கள் கொள்கைகளாக கூற முடியாது. சமூக நீதி பற்றிய விரிவான பார்வை அதிமுகவிற்கு உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது ஏன்?
நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசுதான். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தெளிவாக உள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டியுள்ளது. நீட் தேர்வை நாங்கள் கொண்டுவந்தது என்று கூறுவது சட்டரீதியாக எதிரான நடவடிக்கை. கல்வி அமைச்சராக இருந்தபோது எந்த இடத்திலும் நான் நீட் தேர்விற்காகக் கையெழுத்திடவில்லை.
இதை எங்கு வேண்டுமானாலும் நான் கூற முடியும். நீட் தேர்வுக்காக நாங்கள் யாரும் கையெழுத்திடவில்லை. இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று நாங்கள் வாதாடினோம் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மு.க. ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். எந்த மாநில முதலமைச்சராவது அதற்குப் பதிலளித்தார்களா எனக் கேள்வி எழுப்பிய மாஃபா. பாண்டியராஜன் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்துப் போராடி அதற்காகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக அரசுதான் எங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம்.
அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் கொண்டுவந்துள்ளோம். இன்று 540 ஏழை குழந்தைகள் நீட் தேர்வின் மூலமாக மருத்துவப் படிப்பு படிப்பதற்கு காரணம் எடப்பாடி அரசுதான் அந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கூட திமுக எதிர்த்தது. தற்போது 8 விழுக்காடு மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாகத் தேர்வாகியுள்ளனர்.
நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் திமுக
நீட் தேர்வால் பிளஸ் மைனஸ் இரண்டும் உள்ளன. மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கக்கூடாது என்ற காரணத்தால் நாங்கள் நீட் தேர்வை எதிர்த்தோம். ஆலகால விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு அமிர்தத்தை வழங்கியவராக ஜெயலலிதா இருந்தார்.
தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கொண்டுவந்தோம். இதனால் தமிழ்நாடு மாணவர்கள் அதிகம் தேர்ச்சிபெற்றனர். ஆனால் அந்தப் பயிற்சி மையத்தையும் திமுக அரசு முடக்கியுள்ளது. நீட் தேர்வை வைத்து முழுக்க முழுக்க திமுக அரசியல் செய்துகொண்டு இருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.
ஒன்பது மாதங்களுக்கு முன் தேர்தல் பரப்புரையில் ஒரு ரகசிய மந்திரம் இருக்கிறது எனக் கூறிய உதயநிதி தற்போது துபாயில் இருக்கிறார். செங்கலை கையில் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராகத்தான் என உதயநிதி கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது எப்படி நீங்கள் அதைச் செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எங்களிடம் ரகசிய திட்டம் இருக்கிறது எனக் கூறிய உதயநிதி இப்போது எங்கே இருக்கிறார். அப்போது தெரியவில்லையா ஆளுநர் ஒருவர் இருக்கிறார். அவர் எதையும் திருப்பி அனுப்ப முடியும் என்ற அதிகாரம் உள்ளது என்று. இல்லாத விஷயங்களை இருப்பதாகக் கூறி எல்லாரையும் ஏமாற்றிய திமுக அரசு தற்போது ஏமாந்து நிற்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை திமுகவின் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை நடைபெற்றுவருகிறது. மாணவர்களுக்கான பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்குங்கள் முடிந்தால் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முடிந்தால் 12.5 விழுக்காடு அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் அதில் அரசு உதவி பெறும் பள்ளியையும் கொண்டுவாருங்கள்” என்றார்.