விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் இன்று (மே 18) தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக, ரசாயன அறையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த இருளாயி, ஐய்யம்மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, படுகாயமடைந்த தொழிலாளர்களை சகத் தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த பயங்கர விபத்து குறித்து தகவலறந்த மாரனேரி காவல் நிலையப் போலீசார் இந்த பயங்கர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் குமரேசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பந்தமாக பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, போர்மேன், மேலாளர் என 3 பேர் மீது மாரநேரி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பயங்கர விபத்தைத்தொடர்ந்து இந்த மூன்று பேரும் தலைமறைவாகி உள்ளனர். ஆகவே, பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரையும் மாரநேரி போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தனி வாட்டாட்சியர் ஸ்ரீதர், வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் போர்மேனை போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருளாயி என்பவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்' என அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைக்கு சிவகாசி வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில், வெடி பொருளின் அளவு வாரியாக 25 கிலோவிற்கு டி.ஆர்.ஓ என்ற உரிமமும், 200 கிலோவிற்கு சென்னை என்ற உரிமமும், இவைகளுக்கு மேல் வெடி பொருள் பயன்படுத்துவதாக இருப்பின் அந்த ஆலைகளுக்கு நாக்பூர் உரிமமும் வழங்கப்படுகின்றன. இந்த நாக்பூர் உரிமத்தைப் பெறுதற்கு முன்பு பட்டாசு ஆலைகள் சரியாக போதிய இடைவெளியுடன் பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளதா, பாதுகாப்புக்காக நீர், மணல் நிரம்பிய வாளிகள் உள்ளனவா? என்பன உள்ளிட்டவைகளை ஆராய்ந்தப் பிறகே வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையால் இந்த உரிமம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலி!
மேலும், இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ஐய்யம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் 6ஆம் தேதி நடந்த பயங்கர வெடிவிபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மார்ச் 22ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முள்ளிவாய்க்காலில் 14வது தமிழினப்படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு!