விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவனத்தம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மூத்த மகன் சந்தோஷ். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் சந்தோஷ் வெளியில் நண்பர்களோடு விளையாட சென்றதாகக் கூறப்படுகிறது.
எப்போதும்போல நேற்று (ஜூலை 14) விளையாட சென்ற சந்தோஷ் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சந்தோஷை அவருடைய பெற்றோர் ஊர் முழுவதும் தேடினர்.
ஆனால் எங்கு தேடியும் சந்தோஷ் கிடைக்கவில்லை. இதனிடையே, அதே பகுதியில் உள்ள கண்மாயில் சிறுவனின் உடல் மிதப்பதாக தகவல்கள் கசிந்தன. இதை உறுதி செய்ய சந்தோஷின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சந்தோஷ் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கட்டட வேலைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!