விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் குரங்கு ஒன்று பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த குரங்கு தெருவில் நடமாடுபவர்களை துரத்தி கடித்து வருவதாகவும், தற்போது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, அட்டகாசம் செய்யும் குரங்கைப் பிடிக்க வனத்துறையினருக்கு அக்கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே, அந்த கிராமத்தின் பள்ளிச் சுவரின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென குரங்கு வந்து அமர்ந்தது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சிலை போல் அமர்ந்திருந்தான்.
சின்ன அசைவு கூட இல்லாமல் கற்சிலை போல அமர்ந்திருந்த சிறுவனை, குரங்கு விடாப்பிடியாக சீண்டியது. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என பல விதங்களில் குரங்கு முயன்றபோதும், சிறுவனோ இந்த ‘குரங்கு சேட்டைக்கு நான் ஆள் இல்லை’ என்பது போல் அமர்ந்திருந்தான்.
சுமார் 7 நிமிடங்கள் வரை சிறுவன் அசையாமல் அமர்ந்திருந்ததால் ஏமாற்றமடைந்த குரங்கு, ஆள விடுங்கடா என அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. இதனை பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் இதை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க:பச்சிளங்குழந்தைகளைத் தூக்கி சென்ற குரங்கு: ஒரு குழந்தை உயிரிழப்பு!