விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கொம்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை என்பவரது மகன் ராஜிவ் காந்தி (32). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவரது தந்தை அழைத்து வர சொன்னதாக பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அவர் உறவினர் என்பதால், ஆசிரியர்களும் மாணவியை அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவியை அருகேயுள்ள தைலத்தோப்பிற்கு அழைத்து சென்று அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரவே, ராஜிவ் காந்தி அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர், நடந்தது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராஜிவ் காந்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.