கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி திலகவதி(50). நேற்று இவரின் சகோதரி மகன் உருட்டுக்கட்டையால் சராமரியாக அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த கிராம மக்கள் எலவனாசூர்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக கிராம மக்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ராஜேந்திரன் என்பவருக்கு தையல்நாயகி, திலகவதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி தையல்நாயகிக்கு செல்வராஜ், தேவராஜ், சுரேஷ் என மூன்று மகன்களும் ஜீவா என்ற பெண்ணும் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வசித்துவருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தையல்நாயகி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், அவரது தங்கை திலகவதியை இரண்டாம் தாரமாக ராஜேந்திரன் திருமணம் செய்துகொன்டார். அப்போது திலகவதியின் தந்தை ராஜேந்திரனுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து வைத்துள்ளார். திலகவதிக்கு மணிமொழி என்ற பெண் உள்ளார். இவர் தியாகதுருத்தில் வசித்து வருகிறார். ராஜேந்திரனும் உடல்நலக்குறைவால் 15 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் அதையூர் கிராமத்திற்கு வந்த திலகவதியின் சகோதரி மூத்த மகன் செல்வராஜ் (45) இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரித்துத் தரும்படி கேட்டபோது இருவருமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தன் சித்தியின் தலையில் சரமாரியாக அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து செல்வராஜ் தப்பி ஓடிவிட்டார்.
பட்டப்பகலில் சொத்துக்காக தன் தாயின் சகோதரி, சித்தியான திலகவதியை மகன் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ளவரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் எண்ணெய் கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி - நிலத்தை மீட்டுத்தர விவசாயி கோரிக்கை