விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வேப்பஞ்சாலை தெருவில் கடந்த 15 வருடங்களாக வசித்துவருபவர் டேனியல் சித்தர்(58). இவர் கடந்த 15 ஆண்டுகளாக மாந்திரீகம் செய்வது, வசியம் செய்வது, பில்லி சூனியம் வைப்பது போன்ற தொழிலை செய்துவந்தார். இந்த நிலையில் விழுப்புரம் அடுத்த நன்னாடு அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் முருகையன்(59). இவரது மூத்த மகளுக்கு உடல்நலக் குறைவு எற்பட்ட நிலையில் சரி செய்வதற்காக சாமியார் டேனியல் சித்தரை நாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மகளின் உடல்நிலையை சரி செய்வதாகக் கூறி சாமியார் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து முருகையன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி டேனியல் சித்தரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியதையடுத்து அவரை கைது செய்ய கனகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து, டேனியல் சித்தரை கைது செய்து விசாரித்ததில் இது போல் பல அப்பாவி மக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் பணம் பறித்த போலி சாமியார் என்பது தெரியவந்தது.