விழுப்புரம்: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சூர் மகன் இலியாஸ் (30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து புதுச்சேரிக்கு வந்த இலியாஸ் பின்னர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பெரம்பையில் வசித்து வந்தார். இங்கு பழைய இரும்பு பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இலியாசுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த டில்லியை சேர்ந்த ரீனா என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2ம் தேதி மயங்கிய நிலையில் இலியாசைக் கண்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் புதுச்சேரி வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையெடுத்து, இலியாசின் உடலை ரீனாவின் பெற்றோர் சுல்தான்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவரின் கழுத்தில் காயம் இருந்ததால், அப்பகுதியில் புதைக்க அனுமதிக்கவில்லை.
இது குறித்து ரீனாவின் உறவினர் கோட்டக்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையெடுத்து, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வு ஆய்வுக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே உடல்கூராய்வு பரிசோதனையில் இலியாஸ் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இலியாஸ் மனைவி ரீனாவிடம் விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதை அடுத்து காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
விசாரணையில் ரீனாபேகம் அங்குள்ள பரோஜி என்பவரின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். பரோஜியோடு நட்பாக பழகி வந்த வானூர் வாழப்பட்டாம்பாளையத்தை சேர்ந்த பலராமன் மகன் சரண்(எ) முனுசாமி (26) என்பவரோடு ரீனாபேகத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சரணோடு நெருக்கமாக இருந்துள்ளார். பின், சரண் மூலம் வாழபட்டாம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அசோக் (31) என்பவர் பழக்கமாகி, அவரோடும் ரீனாபேகம் நெருக்கமாகியுள்ளார் .
இந்த இருவரும் சேர்ந்து, ரீனாவை வெளியே அழைத்து சென்று, அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதித்துள்ளனர். இதில், ரீனாவிற்கு தினமும் 500 ரூபாய், சாப்பாடு, பீர் போன்றவற்றை கொடுத்து வழக்கமாக்கியுள்ளனர். இந்தச் சூழலில் பரோஜி, ரீனாவை இலியாசிற்கு திருமணம் செய்து வைத்ததால், ரீனாவால் ஆடம்பர வாழ்வு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி ரீனா சரண், அசோக்கிடம் கூறியதை அடுத்து, மூவரும் சேர்ந்து இலியாசை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். சாப்பாட்டில் மயக்க மாத்திரையை கலந்து, இலியாசை சாப்பிட வைத்து, அவர் மயங்கிய போது, மூவரும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் கழுத்தைச் சுற்றிதூக்கி இலியாசை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை ரீனா, சரண், அசோக் ஆகிய மூவரையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய மயக்க மருந்து, சுடிதார் துப்பட்டா, இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்காக கணவரை காதலன்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.