சென்னையில் உள்ள புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ் (38). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவருக்கும் பணிபுரியும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகித் தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆனது முதல் ஆரோக்கிய ராஜ் அவரது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்துவந்துள்ளார். கடந்த 5 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரிக்குத் திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் அடிக்கடி மயானத்திற்குச் திருநங்கைகளுடன் சென்று வந்துள்ளார்.
இதனால், ராஜகுமாரி அடிக்கடி தன் மீது காளி சாமி வந்துள்ளதாகக் கூறி தகாத வார்த்தைகளில் கணவர், அருகில் இருப்பவர்களை திட்டியதாகவும், அதனால் வீட்டின் உரிமையாளர் அவர்களை வீட்டைக் காலி செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜகுமாரியை அவரது சொந்த ஊரான ஆலம்பாடியில் விட்டுவிட்டு, அவர் மட்டும் சென்னைக்கு வேலைக்குச் சென்றும் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆரோக்கிய ராஜ் வழக்கம்போல் குழந்தைகளைப் பார்ப்பதற்கு ஆலம்பாடி வந்துவிட்டு மீண்டும் நேற்று அதிகாலை சென்னை புறப்பட தயாரானார். அப்போது, தானும் சென்னைக்கு வருவேன் என அவரிடம் ராஜகுமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு, ஆரோக்கிய ராஜ் மறுப்பு தெரிவிக்க, காளி தன்மீது வந்திருப்பதாகக் கூறி அருகில் இருந்தக் கத்தியை எடுத்து காளி உன்னையும் உனது பிள்ளைகளையும் உயிர்ப் பலி கேட்பதாகக் கூறி கத்தியால் குழந்தைகளைக் குத்த ராஜகுமாரி முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் அருகில் இருந்த கட்டையால் ராஜகுமாரியின் பின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
அதில், பலத்த காயமடைந்த ராஜகுமாரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு முகையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜகுமாரி உயிரிழந்தார். இது குறித்து, அரகண்டநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆரோக்கியராஜை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆடு வளர்ப்பதில் தகராறு - ஒருவர் அடித்துக் கொலை