விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மறைந்த ராதாமணியின் படத்திறப்பு விழா நேற்று அவரது சொந்த ஊரான கலிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ராதாமணியின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "ராதாமணி எம்எல்ஏவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் நமக்கு பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
தான் நோய்வாய்ப்பட்டிருந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டார். மாணவராக இருந்த காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் திமுக பின்வாங்கியதாக சிலர் கூறுகின்றனர். மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க அதிமுகவினர் திட்டமிட்டனர். அதை தடுத்து நிறுத்தவே பேரவைத் தலைவர் மீதான தீர்மானத்தை வலியுறுத்தினோம்.
மூன்று பேரின் பதவியை பறிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த விஷயத்தில் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளோம். எனவே, திமுக பின்வாங்கவில்லை" என்றார்.