விழுப்புரம்: செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபூ.சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து சீமான் பேசியதாவது:
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசம்
உலகத்தில் தலை சிறந்த கல்வியில் முதல் இடத்தில் தென்கொரியா, இரண்டாம் இடத்தில் ஜப்பான், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர், நான்காவது இடத்தில் ஹாங்காங், ஐந்தாவது இடத்தில் பின்லாந்து. இந்த ஐந்து நாடுகளை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் தரமான கல்வியை கொண்டுவருவேன்.
பிள்ளைகள் வீட்டின் செல்வங்கள் அல்ல, நாட்டின் செல்வங்கள். அவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக கற்பிக்கப்படும்.
ஏன் என்றால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுதான் முக்கியம், அந்த அறிவு விற்பனைக்கு அல்ல. உயிர் காக்கும் மருத்துவம் தரம் உயர்த்தப்பட்டு ஒரு ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை இலவசமாக அளிக்கப்படும்.
ஓட்டுக்காக நிற்காமல், நாட்டுக்காக நிற்கிறேன்
முதல் குடிமகனுக்கு கிடைக்கும் சலுகை கடை கோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவேன். இது தான் ஜனநாயகம்.
அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற வேண்டும். மீறி தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அவர்களின் சம்பளத்தில் சரி பாதியை அரசு எடுத்துக்கொள்ளும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை. நான் ஓட்டுக்காக நிற்கவில்லை, நாட்டுக்காக நிற்கிறேன்.
திமுக - அதிமுகவுக்கு மாற்றாக இருக்கிறோம்
இந்த வரலாற்று வாய்ப்பைத் தவற விடாதீர்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. ஆனால் மாற்றம் வரவில்லை. வேறு வழியில்லை என்று சொல்லாதீர்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம்.
எங்களுக்கு ஒருவாய்ப்பு தாருங்கள். எங்கள் ஆட்சியில் வாழ்ந்து பாருங்கள். தமிழ்நாடும் சொர்க்கமாகத் திகழும். செஞ்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி அ.பூ.சுகுமாரை வெற்றி பெறச்செய்யுங்கள்.
நல்ல விதைகளை விதைக்கிறேன்
அவர் கட்சியின் வேட்பாளர் அல்ல, மக்களின் வேட்பாளர். இது தேர்தல் வெற்றி அல்ல, வரலாற்று வெற்றி. எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்தப் பொருளாதர வழியும் இல்லை. பணம் இல்லை, வாக்குக்கு காசு கொடுக்கவில்லை. அவர்கள் கோடிகளைக் கொட்டினார்கள் நாங்கள் ஆகப்பெரும் கொள்கைகளைக் கொட்டுகிறோம்.
நல்ல கருத்துக்களை விதைத்துவிட்டால் தவறான அரசாங்கம் உருவாகாது. கை நிறைய விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகாலமாக விதைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று பல லட்சம் இளைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
திமுக, அதிமுக என மறுபடியும் வரலாற்று பிழையை செய்யாதீர்கள். நமது வேட்பாளர் அபூ.சுகுமாரை வெற்றி பெறச்செய்யுங்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் இலவச மாஸ்க் தரமுடியாத அரசு, வாஷிங்மெஷின் இலவசமாகத் தருமா?