கண்ணெதிரே நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும், கால் கடுக்க 2 கிமீ., நடந்துச் சென்று குடிநீர் சேகரித்துவருகிறார்கள், ஏமப்பூர் கிராமத்தினர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் தாலூகாவில் அமைந்துள்ளது ஏமப்பூர் என்ற சின்னஞ்சிறு கிராமம்.
மரங்கள், பறவைகளின் கீச்சொலி என சொர்க்கபூமியாக திகழும் ஏமப்பூரில் குடிதண்ணீருக்குத்தான் பஞ்சம். இந்த கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக தாய் திட்டத்தின் மூலம் ரூ. 5.25 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில் இத்தொட்டி அமைக்கப்பட்டது.
இனி கிலோமீட்டர் கணக்கில் நடக்கவேண்டாம் தங்கள் ஊருக்கே நீர்தேக்கத் தொட்டி வந்துவிட்டது என அக்கிராம மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டதே தவிர, ஒரு டம்ளர் தண்ணீர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
இது குறித்து ஏமப்பூரைச் சேர்ந்த செல்வம் கூறுகையில், “எங்கள் ஊரில் பெரும் பிரச்னையாக தண்ணீர் பிரச்னை இருக்கிறது. சுமாராக 500 குடும்பங்கள் வசித்தாலும் இன்னும் எங்கள் ஊரில் நீர்த்தேக்கத்தொட்டி செயல்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுவிட்டோம். ஆனால் இப்போது வரும், பிறகு வரும் என பதிலளிக்கிறார்களே தவிர தண்ணீர் கிடைக்கவில்லை” என்றார்.
இதனிடையே, நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றுவதற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத இத்தொட்டியை சமீபத்தில் புதுப்பித்து தேவையில்லாத வகையில் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராணி கூறுகையில், “நாள்தோறும் 2 கி.மீ நடந்துச் சென்று தண்ணீர் எடுக்கச் செல்கிறோம். சில நேரத்தில் குழந்தைகளும் எங்களுடன் வந்துவிடுவார்கள். ஊரடங்கு விடுமுறைக்கு முன்பெல்லாம் பிள்ளைகளை நேரத்துக்கு பள்ளிக்கு அனுப்ப முடியாமல் சிரமப்பட்டேன்.
பெரியவர்கள் வேலைக்குச் செல்வதில்கூட சிக்கல் ஏற்பட்டது. இதை புரிந்து கொண்டு அலுவலர்கள் கவனமெடுத்து தொட்டியைப் பயன்பாட்டுக்கு விட்டால் நன்றாகயிருக்கும்” என்றார்.
இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்கையில், ”ஏமப்பூர் பகுதிக்குட்பட்ட மின்சாரத்துறை அலுவலகத்தில் இருந்து இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதனாலேயே நீர்த்தேக்கத் தொட்டியை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் குடிநீர்.. தாகம் தீர்க்குமா தமிழ்நாடு அரசு!