விழுப்புரம்: செஞ்சி அருகே மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டிய இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் ஏரியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் சாலிக் உசேன், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு பலமுறை மனு அளித்துள்ளார். அதோடு கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளையை தடுக்க கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளார். இந்த செய்தி பரவலாக சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 17) மாலை மீனம்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட கும்பல் அவருடைய வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, இளைஞரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாலிக் உசேன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிசிடிவி: இருசக்கர வாகனத்தை கொளுத்திய 3 பேர் கைது