விழுப்புரம்: புதுவை சாலை, கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்தவர், ஜெயபால். இவருக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1991ஆம் ஆண்டு, கையகப்படுத்தியது.
அதற்கான தொகையை சதுர அடிக்கு ஏழு ரூபாய் 35 காசு என நிர்ணயம் செய்து ஜெயபாலுக்கு வழங்கியது.
இந்தத் தொகை போதாது என விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஜெயபால் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று கடந்த 2012ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையாக சதுர அடிக்கு 25 ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி வீட்டுவசதி வாரியம் மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை வழங்காமல், தற்போது வரை இழுத்தடிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முறையிட்ட ஜெயபால், நீதிமன்ற உத்தரவின்படி இன்று (அக்.05) விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்தார்.
இது குறித்து ஜெயபால் கூறுகையில், 'தன்னிடமிருந்து 15 லட்சம் ரூபாய்க்கு பெறப்பட்ட நிலம் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். இதன் காரணத்தால் பெரும் மனவுளைச்சலில் இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: மதுரையில் பரபரப்பு