விழுப்புரம்: தமிழ்நாட்டில் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை வித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள மீனவர்கள், இந்த சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி அதிக அளவில் மீன்பிடித்து வருகின்றனர். மேலும் சுருக்குமடி வலைகளை வைத்து தான், அவர்களின் வாழ்வாதாரமே இயங்கி வருகிறது.
ஆனால், இத்தடையினால் மீனவ மக்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது, அம்மீன்களை மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், இதனால் மீனவர்களுக்கும் மாவட்ட மீன் வளத்துறை அலுவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் வழக்கம்போல் மீன் பிடிக்க அரசு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, நேற்று (மார்ச்.14) விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை மீனவக் குப்பத்தில் ஐந்து மாவட்ட மீனவ மக்கள், பஞ்சாயத்துதாரர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்காவிட்டால், வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஐந்து மாவட்ட மீனவக் கிராம பஞ்சாயத்தார்களும் கிராம மக்களும் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பு பணியில் சீமான்