விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இணையதள பயன்பாடுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சிலர் பேராசை காரணமாக குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஆன்-லைன் சூதாட்டம் மற்றும் ஆன்-லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி ஆன்-லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு அதில் தாங்கள் வைத்திருந்த பணத்தை இழக்க நேரிடுவதால், மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சமீப காலங்களில் ஆன்-லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து அதன் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக தங்களது கைப்பேசிகளை அவர்களிடம் கொடுப்பதுடன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்காமல் இருப்பதால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதுடன், பொருள் மதிப்பு மற்றும் பல்வேறு விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
எனவே, பெற்றோர்கள் தாங்களும் ஆன்-லைன் சூதாட்டம் மற்றும் அதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்கவும், தங்கள் குழந்தைகளும் அதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்கி குடும்ப நலன், குழந்தைகள் நலன் காக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.