விழுப்புரம் : நேற்று ஒரேநாளில் ஒரு குழந்தை உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 43 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிப்புக்குள்ளாகி ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆயிரத்து 399 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று விழுப்புரம் கந்தசாமி - லே - அவுட் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஒன்றரை வயது குழந்தை, திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக மத்தியக் குழு ஆய்வு!