விழுப்புரம் நகரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் பயணிகள் கை காட்டும் இடங்களில் எல்லாம் ஆட்டோக்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படுகிறது.
மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் அரசு, தனியார் பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ என அனைத்து வாகனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த உத்தரவினை, தொடர்ந்து ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீறி வருகின்றனர்.
இதன் காரணமாக விழுப்புரம் நகரத்திலுள்ள அனைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம், "காக்கி சட்டைக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நாங்களும் காக்கி சட்டை அணிந்திருக்கிறோம். நீங்களும் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள். பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் நீங்கள் அதை கண்ணியமாக செய்ய வேண்டும். முறையான சீருடை பெயருடன் கூடிய பேட்ச் என்று அணிந்து பணியில் ஈடுபட்டால்தான் பொதுமக்களிடையே ஓட்டுநர்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். மேலும் மாவட்ட காவல் துறை சார்பாக அளிக்கப்படும் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று எச்சரிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தக் காலத்தில் இப்படியொருவரா? தோழர் நன்மாறன் குறித்து நெகிழும் ஆட்டோ ஓட்டுநர்!