தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார், அமமுக வேட்பாளர் கணபதி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரகலதா, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி உள்ளிட்ட 30 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்நனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்தநிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதில்., திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ், அகில இந்திய மக்கள் கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 17 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.