விழுப்புரம்: உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 'சந்திரயான் -3 விண்கலம் லேண்டர்' நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இதுவரையில் எந்த நாடும் தரையிறங்காத நிலவில் தென் துருவப்பகுதியில் தனது முதல் தடத்தை பதித்துள்ள நாடு என்ற பெருமையை நமது 'இந்தியா' பெற்றுள்ளது.
இந்த மகத்தான சாதனை திட்டத்தின் இயக்குனராக சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், பல அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விழுப்புரத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களின் தந்தை பி.பழனிவேலு அவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஐஏஎஸ் இன்று (ஆக.24) அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த பி.பழனிவேலுக்கு, மாவட்ட ஆட்சியர் பழனி ஐஏஎஸ் பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி புத்தகங்களை வழங்கினார். மேலும், 'தங்களுடைய மகனால் இந்தியா மட்டுமின்றி உலகமே பெருமிதம் கொள்கிறது' என வாழ்த்துத் தெரிவித்தார். 'சந்திரயான் -3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க விஞ்ஞான அறிவியல் திட்டத்தில் தங்கள் மகன் முதன்மை திட்ட இயக்குநராக இருந்து வழி நடத்தியதால் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் உலகிற்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரியது' என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களின் தந்தை பழனிவேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'இந்தியா மட்டுமின்றி வல்லரசு நாடுகள் சாதிக்க முடியாத நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி உலகிற்கே பெருமை சேர்த்துள்ளார். என் மகனை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் நேற்று வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், தற்பொழுது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் என்னை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் கீழ் நடைபெறும் தமிழகத்திலிருந்து, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக விழுப்புரத்திலிருந்து ஓர் விஞ்ஞானியின் முயற்சியால் சந்திராயன் -3 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது என்றார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்களின் மகன் விழுப்புரம் வரும் சமயத்தில் எனக்கு தகவல் தெரிவியுங்கள் நான் நேரடியாக அவரை சந்திக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
விழுப்புரத்திற்கு தங்களின் மகன் வீரமுத்துவேல் திரும்பி வரும்நிலையில், மறக்காமல் தனக்கு தகவலளிக்க வேண்டும் என்றும் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஐஏஎஸ் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நிலவில் என்ன செய்யப் போகிறது ரோவர் - 14 நாட்கள் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்!