விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வாசவி பஜார், எம்ஜி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சிவன்படை கோயில் தெரு, பாகர்ஷா வீதி, கே.கே.தெரு மற்றும் கோலியனூர் நான்கு முனை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? மற்றும் முககவசம் அணிந்து வருகிறார்களா? என மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை முறையாக நடைபெறுகிறதா? அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறதா? எனவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி. சாலையில் வயதான மூதாட்டி முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் அருகாமையில் சென்று முகக்கவசம் வழங்கி அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பழக் கடையின் உரிமையாளர் முகக்கவசம் அணியாமல் இருப்பதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக அந்த நபரை முகக்கவசம் அணிய அறிவுறுத்தினார். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மேலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம், பெட்ரோல் நிரப்ப வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அதேபோல் அத்தியாவசிய கடை உரிமையாளரிடம் முகக்கவசம் அணியாமல் வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.