விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியார் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியோருக்கான இல்லத்தில் இருந்து ஜாபருல்லா என்பவர் மாயமானது தொடா்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின்பேரில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடந்த 10-ம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள் சித்ரவதைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் இன்று (பிப்.14) உத்தரவிட்டார். பின்னர் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கொடுத்தப் புகார் உட்பட 2 புகார்களின் பேரில் 6 பேர் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 13 பிரிவுகளின்கீழ், கெடார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஆசிரமத்தின் ஊழியர்களான நரசிங்கனூரைச் சேர்ந்த அய்யப்பன் (31), பெரிய தச்சூரைச் சேர்ந்த கோபிநாத்(24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி(35), கேரள மாநிலம் - வயநாடு பகுதியைச் சேர்ந்த விஜி மோகன்(46) ஆகிய 4 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
கெடார் அருகே உள்ள தனியார் ஆதரவற்றோர் மையத்தில் சுகாதாரமற்ற முறையில் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டதும், உரிய அனுமதி இல்லாமல் ஆசிரமத்தை நடத்தியதும் தெரியவந்தது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அண்மையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அன்பு ஜூபின், மரியா ஜூபின் உள்ளிட்ட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் கல்லூரி மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல்!