விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊராட்சியிலுள்ள துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து ஒருவரை ஏலம் விட்டு நிறுத்துவதால், குறைவாக வாக்காளர்களைக் கொண்ட பொண்ணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலைவராகும் வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொண்ணங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவேண்டும் என பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக கூறும் மக்கள், தொடர்ந்து மூன்று முறை இதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்காள்ள செஞ்சி வட்டாட்சியர் ராஜன், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், காவல்துறையினரை பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் தனி ஊராட்சியாக பொண்ணங்குப்பம் அறிவிக்கப்படவில்லை என்றால், தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
பொண்ணங்குப்பம், துத்திப்பட்டு கிராம மக்களிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அம்மக்களும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கையூட்டு வாங்கிய அளவையரைக் கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை