தமிழ்நாட்டில் காலியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 28 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் இயக்குநருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மீதமிருந்த 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து வேட்புமனு திரும்பப் பெற கடைசிநாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் ராஜா, ரகுநாதன், சண்முகம் ஆகிய 3 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 12ஆக குறைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கான சின்னங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் அறிவித்தார்.
அதன்படி, 1. புகழேந்தி (திமுக) உதயசூரியன்,
2. தமிழ்ச்செல்வன் (அதிமுக) இரட்டைஇலை,
3. கந்தசாமி (நாம் தமிழர்) கரும்பு விவசாயி சின்னம்,
சுயேட்சை வேட்பாளர்கள்:
4. கௌதமன் (தமிழ் பேரரசு கட்சி) சாவி சின்னம்,
5. சே. சதீஷ் (மோதிரம்),
6. ர. சதீஷ் (மின் கம்பம்),
7. சுபாகர் (ஏழுகதிர் பேனாமுனை),
8. செந்தில்குமார் (தொப்பி),
9. தங்கராசு (தொலைக்காட்சிப் பெட்டி),
10. தாமோதரன் (நூடுல்ஸ் கோப்பை),
11. முருகன் (பானை),
12. ரவிக்குமார் (வாயு சிலிண்டர்).
இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் நாளை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படிங்க: திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய திருடன்... வலைவீசி பிடித்த காவல் துறை!