விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதிவரை நடைபெற்றது.
இதில் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என 28 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவரும் இயக்குநருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், "விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 28 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு மீதமுள்ள 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், வருகின்ற மூன்றாம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்த வேட்பாளர்