விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக வலுவான அணியாக, வெற்றி பெறக்கூடிய அணியாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் திமுகவின் வெற்றியை தடுக்கவே வருமானவரித் துறை சோதனை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வாய்ப்பில்லை.
தேர்தல் முடிந்தவுடன் இட ஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக போராடிவருகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மற்றும் தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 25 கோரிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரிடம் வைத்துள்ளேன்.
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் முகவராக செயல்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை நடத்தும் வருமானவரித் துறையினர், தமிழ்நாடு அமைச்சர்கள், பழனிசாமியின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தாமல் இருப்பது ஏன்? துரைமுருகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் இதுவரை யாருடையது என்பது தெரியவில்லை.
இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர்களுக்கு சொந்தமான பணம் தென்னந்தோப்பில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். வன்னியர் சமூகத்தினர் ராமதாஸுக்கு எதிராக உள்ளனர். ராமதாஸ் காமெடி தலைவராக மாறிவிட்டார். அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. தொடர்ந்து பாமகவினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
மேலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி தற்போது பாசமிகு மகன் கட்சியாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரின் வெற்றிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பாடுபட வேண்டும். எட்டு வழிச்சாலை திட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து ராமதாஸ் தற்போது அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வசிக்கிறார். ராமதாஸ் அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுபடாது. பாமகவின் கதை முடிவுக்கு வந்துவிட்டது' என்றார்.