விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (22) என்கிற இளைஞர் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி செ.புதூர் என்னும் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், தவறான புரிதலால் அப்பகுதி மக்கள் அவரை தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஏழு பேரைக் கைதுசெய்தனர். இதற்கிடையே காரை கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவேலின் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இந்நிலையில் சக்திவேலின் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் விழுப்புரத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்கிற இளைஞர் சாதியின் பெயரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறியாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்தவித உதவியும் வழங்காதது வேதனையளிக்கிறது. தமிழ்நாடு இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் வன்கொடுமைகள் அரங்கேறிவருவதற்கு ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.
இதுபோன்ற சம்பவத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் சார்பில் ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைதி வழியில் போராடும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியுள்ளனர்.
டெல்லி வன்முறைச் சம்பவத்துக்கு பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். தலைநகரில்கூட இவர்களால் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற இயலவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சி.ஏ.ஏ., என்.பி.ஆர். போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். மத அடிப்படையில் இந்திய சமூகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனச் செயல்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது" என்றார்.