விழுப்புரம்: திரு அருட்பிரகாச வள்ளலாரின் 200ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் வள்ளலார் அருள் மாளிகை அன்பர்கள் சார்பில் ஐம்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், அமைச்சர் கே.பொன்முடி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காலை 6.00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பெற்று, 7.00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் சன்மார்க்க அன்பர்களால் ஓதப்பெற்றது. காலை 8.30 மணியளவில் சுத்த சன்மார்க்க நீதிக் கொடி கட்டப்பட்டது.
![விழாவில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vpm-01-frantline-workers-job-problem-vallalarbirthday-visual-byte-tn10060_05102022151029_0510f_1664962829_1011.jpg)
பின்பு, அக்டோபர் 2ஆம் தேதி நடத்தப்பட்ட, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கான வள்ளலாரை பற்றிய பேச்சுப்போட்டி, அகவல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களுடன், காசோலைகளும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி, காய்கறி, பருப்பு வகைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. 200 ஏழை எளியவர்களுக்கு, புத்தாடைகளும், அரசுப்பள்ளியில் படிக்கும் 200 மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பின், மூன்றும் வேளையும் தொடர் அன்னதானம் ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மக்கள் நலத்திட்ட உதவிகளையும், மாணவியர்களுக்கு பரிசுத்தொகைகளையும், நினைவுப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடியும், சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும் தொடங்கிவைத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, அருட்பெரும் தந்தை வள்ளலாரின் சன் மார்க்க கொள்கையை கடைப்பிடித்து அனைவரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் நலமாக வாழ வேண்டும்.
நல்லதையே நினைப்போம், நல்லவற்றையே செய்வோம், வஞ்சகம் இல்லா வாழ்வியல் கொள்கையை ஒவ்வொரு மனிதனும் வகுத்துக் கொள்ளும் கோட்பாட்டை கடைபிடித்து மனிதர்கள் வாழ வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் உடன் திருமாவளவன்!