புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆமூர், கொளத்தூர், துளக்கம் பட்டு,குப்பம் ஆகிய கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேறாததைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்லத்தை முற்றுகையிட அப்பகுதி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜியகுமார், வட்டாட்சியர் காதர் அலி, ஆய்வாளர் எழிலரசி ஆகியோரின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றனர். இதை அருகில் இருந்த காவல் துறையினர் தடுத்து விஷத்தை கைப்பற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு, ’ தாங்கள் ஏற்கெனவே இந்த கோரிக்கையை அரசிடம் சொல்லாததால் தற்போது நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இணைய வேண்டிய சூழல் உள்ளது’ என கூறினார். இதனால் பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ’சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை நான் அரசிற்கு தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.
அதன் பின்னர், பொதுமக்கள் எங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரைத் தொடர்ந்து பல கட்டப் போராட்டத்தை தொடருவோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க:தனியார் விடுதியில் தங்கி எல்இடி டிவியைத் திருடிச் சென்ற நபர் - காவல்துறையினர் விசாரணை!