சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் வெள்ளரிக்காய் வியாபாரி ராஜா. இவர், கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியிலுள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிடப் பணம் பட்டுவாடா செய்யதுவிட்டு தனது காரில் 30 லட்சம் ரூபாயுடன் திரும்பிச் சென்றார்.
அப்போது, காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே, காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயைக் கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.
பிறகு இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 18 ஆம் தேதி பன்னீர் செல்வம், மணிமாறன், மனோஜ் குமார், செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று(செப். 24) சென்னையைச் சேர்ந்த திலிப், அஜித்குமாரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கே.டி.எம் பைக்கை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது திலிப்பும், அஜித்குமாரும் வைத்திருந்த பணம் வெள்ளரிக்காய் வியாபாரி ராஜாவிடம் திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே ரூ. 12 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல்