புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் காளிங்கன் (28), பிரசாந்த் (28), ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களாக காளிங்கன் தொடர் விடுமுறையில் இருந்ததும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் சந்தேகத்திற்கு இடமளித்ததால், திண்டிவனம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பண இருப்பு உள்ளதா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது 78 லட்சம் ரூபாய் குறைவாக இருப்பதும், அந்த பணத்தை காளிங்கன், பிரசாந்த் இருவரும் கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக, விழுப்புரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 2) இரவு திண்டிவனத்தில் இருந்து இருவரும் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்றதாக வந்த தகவலின் அடிப்படையில், இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் கொள்ளை!